search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீன் மூர்த்தி பவன்"

    தீன்மூர்த்தி பவனில் இருந்து சோனியா தலைமையில் செயல்படும் நேரு அறக்கட்டளை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #TeenMurtiBhavan #Congress

    புதுடெல்லி:

    ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது டெல்லியில் உள்ள அரசு மாளிகையான தீன்மூர்த்தி பவனில் வசித்து வந்தார்.

    அவரது மறைவுக்கு பிறகு அந்த இல்லம் நேரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அங்கு பெரிய அளவில் நூலகமும் செயல்பட்டு வருகிறது.

    நேரு மரணம அடைந் ததையடுத்து அவரது பெயரில் நேரு நினைவு நிதியம் என்ற பெயரில் 1964-ல் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது.

    இந்த அறக்கட்டளையின் அலுவலகமும் தீன்மூர்த்தி பவனில்தான் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக கரன்சிங்கும் இருந்து வருகின்றனர்.

    அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு படிப்பு உதவி, ஆய்வு மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

    மேலும் ஆண்டு தோறும் நேரு பிறந்தநாளில் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

    சமீபத்தில் தீன்மூர்த்தி பவனை அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகமாக மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது, நேரு அருங்காட்சியகமாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    தீன்மூர்த்தி பவன் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    இந்த நிலையில் தீன்மூர்த்தி பவனில் செயல்படும் நேரு நினைவு நிதிய அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்யும் படி வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அறக்கட்டளைக்கு கடந்த 11-ந் தேதி நோட்டீசு அனுப்பப்பட்டது. செப்டம்பர் 24-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


    நேற்று 24-ந் தேதி ஆகும். இதுவரை அறக்கட்டளை அங்கிருந்து காலி செய்யப்படவில்லை.

    காலி செய்யும்படி வந்த உத்தரவுக்கு அறக்கட்டளையின் செயலாளர் சுமான் துபே கடந்த 20-ந் தேதி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது சம்பந்தமாக அறக்கட்டளையின் துணைத் தலைவர் கரன்சிங் கூறியதாவது:-

    மத்திய அரசு இப்படி ஒரு நோட்டீசை அனுப்பி இருப்பது அறக்கட்டளையை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த அறக்கட்டளையின் நிதியில் இருந்துதான் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.

    மேலும் இதன் நிதியை அவற்றை பராமரிப்பதற்கும் வழங்கி வருகிறோம். தற்போது இந்த அருங்காட்சியகத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார்கள்.

    அறக்கட்டளையை காத்துக்குக்கொள்ளும் வகையில் நாங்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம். மேலும் 1964-ல் இருந்து வாடகை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    அருங்காட்சியகத்துக்கும், எங்களுக்கும் எந்த உறவும் இல்லாதது போல் இந்த நடவடிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி அருங்காட்சியக டைரக்டர் சக்தி சின்கா கூறும் போது, நேரு நினைவு நிதியம் அதிகாரப்பூர்வம் அற்ற முறையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த இடத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இங்குள்ள நூலகத்துக்கு அதிக மக்கள் வரும் நிலையில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த இடத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

    எனவே, இங்குள்ள நிர்வாக அலுவலகம், நூலகத்துக்கு சம்பந்தம் இல்லாத அலுவலகங்கள் ஆகியவற்றை வெளியேற்றுகிறோம். ஏற்கனவே உள்ள கட்டிடத்தை விரிவுபடுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தீன் மூர்த்தி பவன் அனைத்து பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.#TeenMurtiBhavan

    புதுடெல்லி:

    டெல்லியில் ஜனாதிபதி மாளிகையையொட்டி அமைந்துள்ளது தீன்மூர்த்தி பவன்.

    நேரு பிரதமராக இருந்த போது, 16 ஆண்டுகள் இந்த மாளிகையில்தான் வசித்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு தீன்மூர்த்தி பவன் நேரு நினைவு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மேலும் அங்கு நூலகமும் செயல்பட்டு வந்தது.

    இந்த மாளிகை 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 1930-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது கட்டப்பட்டது.

    முதலில் ராணுவ தலைமை தளபதியின் மாளிகையாக இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகு நேரு பிரதமராக பதவி ஏற்றதும் அவரது இல்லமாக மாறியது.

    தற்போது தீன்மூர்த்தி பவன் அனைத்து முன்னாள் பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

     


    நேருவில் இருந்து மோடி வரை உள்ள அனைத்து பிரதமர்களின் முக்கிய நிகழ்வுகளும் காட்சியகத்தில் இடம்பெறும் வகையில் அருங்காட்சியமாக அமைக்க உள்ளனர்.

    அதன்படி ஒவ்வொரு பிரதமரின் ஆட்சிகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இடம் பெறும். இதில் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எமர்ஜென்சி, பின்னர் அவர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட பொற்கோவில் ‘புளூஸ்டார் ஆபரேசன்’ போன்றவையும் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது சம்பந்தமாக நேரு அருங்காட்சியக டைரக்டர் சக்தி சின்கா கூறும்போது, இந்திரா காந்தியை பற்றி குறிப்பிடும் போது, அவர் கொண்டு வந்த எமர்ஜென்சி, புளூஸ்டார் ஆபரேசன் போன்றவற்றை விட்டு விட்டு மற்றவற்றை மட்டும் காட்சிப்படுத்த முடியாது. எனவே, அதுவும் இடம்பெறும் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் காட்சியகத்தில் இடம் பெறுமா? என்று கேட்டதற்கு எந்தவொரு பிரதமருடைய திட்டங்களையும் நாங்கள் மறைக்க மாட்டோம். அனைத்தும் இடம்பெறும்.

    மேலும் தேவேகவுடா, சரண்சிங், சந்திரசேகர், வாஜ்பாய், மன்மோகன்சிங் என அனைவருடைய ஆட்சி காலத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறினார்.

    ×